விஜய் பரபரப்பு கடிதம்...மதுரை மாநாட்டிற்கு இவர்கள் வர வேண்டாம்!
தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்கள் அரசியல் இயக்கமான த.வெ.க. மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும், தேர்தல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப்போகிறது. விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தல் அரசியல் களத்தில் தங்களுடைய பலத்தை நிரூபிக்க போகிறது. நமது கனவு நனவாக இலக்கை எட்ட புரட்டிப் போடப் போகும் புரட்சி நிகழ இன்னும் சில மாதங்களே உள்ளன.
1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள். இந்தத் திருப்புமுனைத் தருணத்தை நிரூபிக்கப் போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த, ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகின்றனர்.
தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள் கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள். உடல்நலம் குன்றியோர். பள்ளிச் சிறார்கள். மாற்றுத் திறனாளிகள் ஆகியோர். நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.