அக்.17-ம் தேதி விஜய்யின் கரூர் பயணம் தள்ளிப்போக வாய்ப்பு..!
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூற, விஜய் கரூர் வந்து மக்களை சந்திப்பதற்காக தவெக சார்பில், டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை கரூரில் தனியார் மண்டபத்துக்கு வரவழைத்து, அங்கு அவர்களை விஜய் சந்தித்து ஆறுதல் கூறி, இழப்பீடு தொகை வழங்க திட்டமிடப்பட்டது. மேலும், கரூர் - ஈரோடு சாலையில் உள்ள கேஆர்வி மெரிடியன் ஓட்டலில் நிகழ்ச்சிக்காக தவெக சார்பில் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த ஓட்டல் ஏற்கெனவே பிரச்சார கூட்டம் நடந்த இடத்துக்கு அருகேயுள்ளதால் வேறு இடத்தை தேர்வு செய்யுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், விஜய் மீண்டும் கரூர் வரும்போது, அதிகளவு ரசிகர்கள் வர வாய்ப்புள்ளதால், ஓட்டல், திருமண மண்டபங்களை வழங்க அதன் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே, இடம் தேர்வு செய்வதில் எழுந்துள்ள சிக்கல் காரணமாக, விஜய் அக்டோபர் 17-ம் தேதி வருவதாக இருந்தது மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இடத்தை தேர்வு செய்த பிறகு, விஜய் வரும் தேதி முடிவு செய்யப்படும் எனவும், இடம் வழங்க பலரும் தயக்கம் காட்டி வருவதாகவும் தவெகவினர் தெரிவித்தனர். பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விஜய்யின் வருகை தீபாவளிக்கு பிறகே இருக்கும் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.