விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை..! சிக்கலில் சீமான்..?

நடிகை விஜயலட்சுமி 2011ல் சீமானுக்கு எதிராக கொடுத்த புகாரை அப்போதே திரும்பப் பெற்றுவிட்டார். அதே பிரச்சனைக்கு மீண்டும் அவர் தற்போது கொடுத்துள்ள புகாரின்பேரில் சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். இதில் பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையின்போது ஆடியோ ஆதாரங்கள், வங்கி பண பரிவர்த்தனை, ஹோட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை விஜயலட்சுமி போலீசாரிடம் அளித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த வாரம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்தார். வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் நீதிபதியிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக நடிகை விஜயலட்சுமியை போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 6 முறைக்கு மேல் தன்னை சீமான் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக, விஜயலட்சுமி புகாரில் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த புகாரின்பேரில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.