விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் : அமைச்சர் சேகர்பாபுவை அனுப்பி வைத்த முதல்வர்!
நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அவருடைய நினைவிடம் உள்ள கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் நோக்கி அதிகாலை முதலே தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் படையெடுத்தனர்.
விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி, தேமுதிக அமைதி பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறித் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கேச்சுதீஷ் உள்ளிட்டோர் கடந்த திங்கள்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விஜயகாந்த் நினைவு நாள் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. அதேசமயம், விஜயகாந்த் நினைவிடத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக சார்பில் குரு பூஜையில் கலந்து கொள்ள முதல்வர் என்னை அனுப்பியுள்ளார். கேப்டன் திரையுலகில் பலரை அறிமுகம் செய்துள்ளார். ஊழலுக்கு எதிராக, விழிப்புணர்வை ஏற்படுத்தத் திரைப்படங்கள்மூலம் நடித்தவர். மனித தெய்வமாக உள்ள கலைஞர் தயாரித்த, கதை வசனத்தில் நடித்தவர் விஜயகாந்த்.
கலைஞருக்கு விழா எடுத்து, தங்கப் பேனா வழங்கிச் சரித்திரம் படைத்தவர். காணொலி காட்சிமூலம் கலைஞர் மறைவுக்கு விஜயகாந்த் கண்ணீர் சிந்தியது என்றைக்கும் மறக்க முடியாதது. அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவுடன் அவர் நேராகச் சென்ற இடம் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம்தான்.
கேப்டன் மறைவு செய்தி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக அஞ்சலி செலுத்தியதோடு, அரசு மரியாதை செலுத்த உத்தரவிட்டார். விஜயகாந்த் மீதான மாறாத பற்றின் காரணமாக முதலமைச்சர் அமைச்சரான என்னை நேரடியாக அனுப்பி வைத்துள்ளார்.
திராவிட மாடல் அரசுக்கும் திராவிடம் என்கிற சொல்லுக்கும் அவருடைய கட்சிக்கு இந்தப் பெயரை வைத்திருக்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு அரசின் முழு மரியாதை வழங்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர்மீதான அதே அன்பும் பற்றும் விஜயகாந்த்க்கு இருந்துள்ளது. விஜயகாந்தின் லட்சியத்தை பொதுச்செயலாளர் பிரேமலதா தொடர்ந்து வழிநடத்திச் செல்லப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் – கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மறைவின்போது, அரசு சார்பில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தேமுதிகவினரின் பாராட்டைப் பெற்றார் முதல்வர் ஸ்டாலின். விஜயகாந்த்துக்கு உச்சபட்ச மரியாதை அளிக்கப்பட்டதன் மூலமும், நல்லடக்க நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலமும் மக்களின் இதயங்களை வென்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். விஜயகாந்த் மறைந்தது முதல், அவரது நல்லடக்கம் சீரிய வகையில் நடத்தப்பட்டது வரை, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக அரசு தரப்பிலிருந்து பல வகைகளிலும் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கப்பட்டன.
விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எந்தவித தடங்கலுமின்றி நடந்தேற வேண்டும். அவரது குடும்பத்தினருக்கோ, தொண்டர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த வித சிரமமும் ஏற்படக் கூடாது என்ற முதல்வர் ஸ்டாலினின் கண்டிப்பான உத்தரவால் காவல்துறை தொடங்கி, அனைத்து தரப்பினரும் பார்த்துப் பார்த்துச் செய்தனர்.
மறைந்த கேப்டன் விஜயகாந்த், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர், அவரது திருமணமே கருணாநிதி தலைமையில் தான் நடந்தது. அந்த வகையில், விஜயகாந்த் மீது வைத்துள்ள அன்பினால், முதல்வர் ஸ்டாலின், அவருக்கு மிகச்சிறந்த மரியாதையை அரசு சார்பில் அளித்துப் பிரியாவிடை கொடுத்திருந்தார்.