1. Home
  2. தமிழ்நாடு

விஜயதரணியை வரவேற்பதோடு அவரது வருகை தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் : அண்ணாமலை..!

1

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தார். 

கட்சியில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச அளவில் இந்திய தேசம் பல சாதனைகளைப் புரிந்து வருவதால் அவரின் தலைமையில் அரசியல் பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார் .

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவில், “காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, இன்று பாஜகவில் இணைந்துள்ளார். விஜயதரணியை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, விஜயதரணி பாஜகவுக்கு சென்றது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்தப் பேட்டியில், “விஜயதரணிக்கு கட்சி 3 முறை வாய்ப்பு கொடுத்தது. ஆனாலும் அவர் கட்சி மாறியிருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 3 முறை விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக தொடர் வெற்றி பெற்ற விஜயதரணி, இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு எம்.பி. சீட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதுகுறித்து எவ்வித தகவலும் காங்கிரஸ் தரப்பில் இல்லாத நிலையில், பாஜகவில் இணைய முடிவு செய்ததாகவும், அவர் குமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Trending News

Latest News

You May Like