தேமுதிக சார்பில் களமிறங்கும் விஜய பிரபாகரன்..! அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு..!!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என அரசியல் கட்சிகள் பரபரப்பாக செயல்படுகிறனர். திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருதுநகரிலும், பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் கள்ளக்குறிச்சியிலும் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளானர். இதன் மூலம், அவர்கள் இருவரும் விருதுநகர், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவது உறுதி எனத் தெரிகிறது.
இந்நிலையில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து சுதீஷ் பேசி இருந்தார்.
இதுத்தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளரை சந்தித்தனர். அப்போது தேர்தல் ஒப்பந்தத்தில் இருவரும் பரஸ்பரம் கையெழுத்திட்டனர். இதையடுத்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி
1.திருவள்ளூர் (தனி)
2.மத்திய சென்னை
3.கடலூர்
4.தஞ்சாவூர்
5.விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.