மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்...என்னை அறியாமல் கை தட்டிவிட்டேன் - எஸ்.ஏ.சி சந்திரசேகர்..!
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் சுமார் 45 நிமிடங்கள் விஜய் உரையாற்றினார். தனது பேச்சில் திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் ஆக்ரோஷ பேச்சு தங்களை மெய் சிலிர்க்க வைத்ததாக மாநாட்டில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள் கூறி சிலாகித்தனர். இந்த நிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சி சந்திரசேகரும் மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து பிரமித்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது:
"மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார். அவர் இப்படி பேசுவார் என நான் நினைக்கவே இல்லை. என் மகன் சினிமாவில் நடித்து பார்த்திருக்கிறேன். ஆனால், மேடையில் அப்படி பேசியதை பார்த்து பிரமித்துவிட்டேன். முதலில் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். பின்பு என்னை அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். மனதிற்குள் இருக்கும் வேகம், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் என அனைத்தும் சேர்ந்துதான் அப்படி விஜய்யை பேச வைத்தது" என்றார்.