மாணவர்களுக்குத் தனது சொந்த செலவில் ரூ.14.65 லட்சம் கல்வி உதவி தொகை - விஜய் வசந்த் எம்.பி..!
விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்தக் கல்வி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஏழை எளிய மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு சொந்த செலவில் ரூ. 14.65 லட்சம் வழங்கியுள்ளேன்.
நிதி இல்லாத காரணத்தால் அணைத்து மாணவர்களும் தங்கள் கல்வி பயணத்தைப் பாதியில் நிறுத்தி விடக் கூடாது என எனது தந்தை மறைந்த வசந்த குமார் அவர்கள் உறுதியுடன் இருந்தார்.
இதற்காக அவர் ஏழை மாணவர்களின் கல்வி செலவிற்காக ஏராளமான உதவிகள் செய்து வந்தார். அவரது மறைவிற்கு பின் அவர் வழியில் எல்லா வருடமும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவிகள் செய்து வருகிறேன்.
இந்த வருடமும் [2024- 25] கல்வி ஆண்டில் கல்வி நிதி உதவி வழங்குவதற்கு தகுதியான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பெற்றோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.அதன் அடிப்படையில் அவர்களின் தகுதியை ஆராய்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடியாகக் காசோலை வழங்கப்பட்டது.
இந்தியாவின் பிரகாசமான எதிர்காலம் இளைஞர்களின் கரங்களில் உள்ளது. அந்த இளைஞர்களுக்குச் சிறந்த கல்வி செல்வதை அளிக்க வேண்டியது நம் அனைவரது கடமை.எனது தரப்பிலிருந்து என்னால் இயன்ற வரையில் அதைத் தொடர்ந்து செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்,அகஸ்தீஸ்வரம் பகுதி பெற்றோர் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு ஒரு அங்கன்வாடி அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14. 5 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்.