இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு..!
த.வெ.க. தலைவர் விஜய் தனது தமிழக சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.13) அன்று திருச்சியில் தொடங்கினார். அந்த சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இன்று (செப்.20) நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக த.வெ.க. தலைமை நிலையக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, இன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகே காலை 11.00 மணிக்கும், திருவாரூர் மாவட்டம், நகராட்சி அலுவலகம் அருகில், தெற்கு வீதியில் மாலை 3.00 மணிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.