1. Home
  2. தமிழ்நாடு

விஜய் 300 கோடி வருமான வரி கட்ட வேண்டும்... அவர் கட்டியதோ 80 கோடி... அப்போ மீதி 220 கோடி..? - அப்பாவு அட்டாக்..!

1

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் கலை சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியை அவர் தவில் இசைத்து தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார். தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கிராமிய கலைஞர்களுடன் மேடையில் தப்பு இசைத்து கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்கள் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசுகையில், “மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தும் எந்த அரசியல் கட்சிக்கும் தமிழக அரசு அனுமதி மறுத்தது கிடையாது. 200 கிறிஸ்தவ ஆலயங்கள் மணிப்பூரில் இடிக்கப்பட்டபோது போராட்டம், வக்பு வாரிய திருத்த மசோதா உ.பியில் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி வழங்காதது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு போராட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் அனுமதி கேட்கவில்லை. மக்கள் நலம் சார்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று போராடியுள்ளார்களா?, அதுபோன்ற போராட்டத்தை நடத்த இவர்கள் அனுமதி கேட்கவில்லை.

ஆண்டுக்கு ஆயிரம் கோடி வருவாயை விட்டு விஜய் மக்கள் பணி செய்ய அரசியலுக்கு வந்திருப்பதாக அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்திருந்தால் முன்னூறு கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு 80 கோடி மட்டுமே வருமான வரி செலுத்தி இருப்பதாக தகவல்கள் உள்ளது. மீதம் இருக்கும் 220 கோடி ரூபாய் தொடர்பாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வசூல் செய்யுமா? அப்படி செய்தால் பாஜகவுடன் அவர்கள் கூட்டணியில் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். வருமான வரித்துறை சோதனை செய்யாவிட்டால் பாஜக சொல்லித்தான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகிவிடும்.

கிராம சபை கூட்டங்களில் போராட்டம் நடத்தி நாடகத்தை நாங்கள் நடத்தவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய 4000 கோடி ரூபாய் தரவில்லை. அது ஏழை மக்களின் ஊதியம். அதனாலேயே மக்கள் மத்தியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வங்கிகளில் கடன்களை பெற்றுக் கொண்ட குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு மட்டுமே 16½ லட்சம் கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தொழிலதிபர்கள் தமிழகத்தில் இல்லையா?. 50,000 கோடி கல்விக்கடன், விவசாய கடன் என பல்வேறு கடன்கள் சாமானிய மக்களால் பெறப்பட்டுள்ளது. அதனை தள்ளுபடி செய்ய அவர்களுக்கு மனம் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.

பாஜகவின் மறைமுக திட்டத்தின் அடிப்படையிலேயே விஜயின் தமிழக வெற்றி கழகம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷாவோடு தமிழக வெற்றிகழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடர்பில் இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. பாஜகவின் அஜண்டாவிலேயே தமிழக வெற்றிக் கழகம் இயக்கப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்திற்கு 39 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர்கள் கட்சிக்கு வேண்டுமானால் நிதி வாங்கி இருக்கலாம். எங்களுக்கு அதுபோன்ற எந்த நிதியும் வரவில்லை” என கூறினார்.

Trending News

Latest News

You May Like