1. Home
  2. தமிழ்நாடு

பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால் மாற்று இடத்தை விஜய் சொல்ல வேண்டும்: அண்ணாமலை!

1

பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றினார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களை ஏகானாபுரத்தில் சந்தித்தார். பனையூரில் இருந்து இன்று காலை பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட விஜய் பரந்தூர் ஏகனாபுரம் வருகை தந்தார். தனியார் மண்டப வளாகத்தில், பிரச்சார வேனில் நின்றபடி, மக்கள் மத்தியில் உரையாற்றினார். விஜய் பேசுகையில், “பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 910 நாட்களுக்கு மேலாக, நீங்கள் உங்கள் மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். நாட்டுக்கு முக்கியமானவர்கள் விவசாயிகள்தான். அதனால்தான் உங்களைப் போன்ற விவசாயிகள் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு விட்டு என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என முடிவோடு இருந்தேன். பரந்தூரில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள், 13 நீர் நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்த தயங்க மாட்டேன். இந்த முயற்சியில் உங்களுடன் உறுதியாக நிற்பேன். மத்திய, மாநில அரசுக்கு சொல்கிறேன் – விஜய் விமான நிலையம் வரக்கூடாது என சொல்ல வரவில்லை என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விமான நிலையம் வேண்டாம் என்றால் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கதை கட்டி விடுவார்கள். பரந்தூரில் விமான நிலையம் என்பதை தாண்டி அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றனர். பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பதற்காக ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்குக் கேட்டுக் கொள்கின்றேன். விவசாயத்துக்கு பாதிப்பு குறைவாக உள்ள இடத்தில் இந்த திட்டத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சி என்பது முன்னேற்றம் தான். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் ஏற்படும் பேரழிவு தடுக்கப்பட வேண்டும்” எனப் பேசினார்.

இந்நிலையில், பரந்தூரில் தவெக தலைவர் விஜய் பேசியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அண்ணாமலை கூறியதாவது:-

முழு தமிழ்நாடும் புதிய விமான நிலையம் வேண்டும் என்பதை விரும்புகிறது. தமிழ்நாட்டில் புதிய விமான நிலையங்களின் தேவை உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. மத்திய அரசுக்கும், பரந்தூரை தேர்வு செய்ததற்கும் சம்பந்தம் இல்லை. விஜய் மத்திய அரசை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இதில் மத்திய அரசுக்கு என்ன சம்பந்தம்? பொத்தாம்பொதுவாக பேசுவது புதிய அரசியல் தலைவருக்கு அழகா? விமான நிலையம் அமைக்க அதிமுக ஆட்சியில் தேர்வு செய்த இடத்திலும் பரந்தூர் இருந்தது. திமுக அரசு அனுப்பிய பட்டியலிலும் பரந்தூர் இருந்தது. மாநில அரசு தேர்வு செய்த பட்டியலின் அடிப்படையில் மத்திய அரசால் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால், விஜய் முன்மொழியும் மாற்று இடம் எது என்பதையும் அவர் கூற வேண்டும். விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் எடுப்பு விவகாரம் முழுவதும் மாநில அரசு தொடர்புடையது என்பதால், மாநில அரசிடம் அவர் தனது பரிந்துரைகளை ஆக்கர்ப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like