1. Home
  2. தமிழ்நாடு

எங்கள் கூட்டணியில் இணையும் வாய்ப்பை விஜய் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்..!

1

சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜக கடந்த ஏப்ரல் மாதமே கூட்டணியை அறிவித்துவிட்டன. திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்ற குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் தங்கள் கூட்டணி அமைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்தக் கூட்டணியை மெகா கூட்டணியாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டுவதால் கூட்டணி தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை.

அதே சமயம் தனித்துதான் போட்டி என அறிவித்த நாம் தமிழர் கட்சி சீமான், ஒவ்வொரு தொகுதியாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். மேலும் பாஜக, திமுக தவிர வேறு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம் என்று விஜய்யின் தவெக தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்படலாம்.

இந்த சூழலில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், “தமிழகத்தில் அதிகம் வளர்ந்துகொண்டிருக்கும் கட்சி பாஜக என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பாஜகவின் தேசியத் தலைவர்கள் தொண்டர்களை சந்தித்து ஊக்கம் அளிப்பதுதான் அதற்கான காரணமாக உள்ளது. இந்த நேரத்தில் உள் துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவது அதிமுக, தமாக போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் பலம் சேர்க்கும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை அழைத்து பாராட்டு தெரிவித்து பரிசு கொடுக்கும் விஜய்யின் செயல் வரவேற்கத்தக்கது. அதனை தவறாகவோ, அரசியலாக்கவோ கூடாது. பெங்களூருவில் ஐபிஎல் கொண்டாட்டம் என்கிற பெயரில் பெரிய தவறு நடந்துள்ளது. 11 உயிர்கள் பறிபோனதோடு, பலரும் காயம் அடைந்துள்ளனர்.

அதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டமிடாத பணியும், காவல்துறையின் மெத்தனப்போக்கும் காரணம். இதற்கு போய் திருவிழாக்களில் கூடும் கூட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சிப்பது பொறுப்பற்ற செயல். இது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பதாகவே பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

மேலும், “திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியை வேதனையான சாதனையாகவே மக்கள் பார்க்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக இது உள்ளது. இதனால் தமிழக மக்கள் தங்கள் வாக்குகளை ஆட்சி மாற்றத்திற்கு அளிக்க தயாராக உள்ளனர். ஆகவே, எங்கள் கூட்டணி தமிழகத்தில் வெற்றிக் கூட்டணியாக வரும்”என்று தெரிவித்தார்.

விஜய் கூட்டணி பற்றிய கேள்விக்கு, “எங்கள் கூட்டணியில் ஒத்த கருத்து உடையவர்கள் சேர வேண்டும். ஒத்த கருத்தோடு செயல்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆட்சி மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது, ஆகவே எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்காமல் செயல்படுகிறதோ அவர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று வாசன் அழைப்பு விடுத்தார்.

Trending News

Latest News

You May Like