மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்!

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, த.வெ.க., சார்பில் விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சட்டசபை தொகுதிவாரியாக மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது மற்றும் விருந்தளித்து, விஜய் வாழ்த்தி வருகிறார். முதற்கட்டமாக, 80 தொகுதிகளுக்கான மாணவர்களுக்கு, மே 30ம் தேதி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இரண்டாம் கட்டமாக இன்று (ஜூன் 04) ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருப்பூர், திருவாரூர், தென்காசி, மயிலாடுதுறை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
மாமல்லபுரத்தில் அதே தனியார் விடுதியில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 'இந்த விழாவை, தென்மாவட்டத்தில் அல்லது டெல்டா மாவட்டத்தில் விஜய் நடத்தி இருந்தால், கட்சிக்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைத்திருக்கும்.
ஆனால், அதை தவிர்த்து, கிழக்கு கடற்கரை சாலையிலேயே விஜய் தொடர்ந்து விழாவை நடத்தி வருவது, கட்சியினர் மத்தியிலும் சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
' தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடு மற்றும் கட்சி அலுவலகம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், தன் பாதுகாப்பு கருதி, கட்சி நிகழ்ச்சிகளை எல்லாம் அங்கேயே அவர் நடத்தி வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.