நடந்தே சென்று அஞ்சலி செலுத்திய விஜய்..!

பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி நேற்று காலமானார். 48 வயதாகும் அவர் மாரடைப்பு காரணமாக காலமானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பின் உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மனோஜ் பாரதி உடலுக்கு திரையுலக பிரபலங்களில், அரசியல்வாதிகள் என்று அனைவரும் நேற்றிரவு முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மகனை இழந்த பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் திரையுலகம் தவித்து நிற்கிறது.
நேற்றிரவே சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் மனோஜ் பாரதிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். தனது நீலாங்கரை வீட்டில் இருந்து மாலை உடன் வந்த விஜய், நண்பர் சஞ்சய் உடன் நடந்தே சென்று மனோஜ் பாரதிக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்த நிலையில், விஜய்-ஐ போலீசார் பாதுகாப்புடன் மீண்டும் வீட்டுக்கு சென்று விட்டனர். சீமானின் காவலாளியை கைது செய்த காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் பாதுகாப்பாக அழைத்து சென்றார்.
மனோஜ் பாரதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் திரும்பிய போது, கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் விஜயால் அவரது வீட்டிற்கு திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.