1. Home
  2. தமிழ்நாடு

அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறியது அரசியல் ஸ்டண்ட் - அமைச்சர் ரகுபதி!

1

காவலர்களின் கொடூரமான தாக்குதல் காரணமாக திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். திருட்டு வழக்கின் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் குமார், காவல்துறையினரால் தண்ணீர் கூட கொடுக்கப்படாமல் மிளகாய் பொடி கொடுத்து துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் காரணமாக அஜித் குமார் குடும்பத்தினரை நேரில் சென்று தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அஜித் குமார் தாயார் மற்றும் சகோதரரின் கைகளை பிடித்து, என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள்.. உடனே செய்து கொடுக்கிறேன் என்று கூறி ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் தவெக சார்பாக ரூ.2 லட்சம் நிவாரண உதவியும் வழங்கினார். நிர்வாகிகளுக்கு கூட தெரியாமல் தவெக தலைவர் விஜய் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் அஜித் குமார் குடும்பத்தினருக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியதை ஸ்டண்ட் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தில் அமைச்சர் ரகுபதி ஈடுபட்டிருந்தார். அந்த பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று திமுகவின் சாதனைகளை கூறினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு தார்மீக உரிமை கிடையாது. அவரது ஆட்சியில் தூத்துக்குடியில் காக்கை குருவிகளைப் போல மக்களை சுட்டுக் கொலை செய்தார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கேட்டபோது தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறியவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரிடம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாகரிகம் உள்ளவர். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை அளிப்பவர். இறந்து போன அஜித்குமாரின் குடும்பத்திற்கு முதல்வர் என்ற முறையில் ஆறுதல் சொல்ல வேண்டியது அவரின் கடமை. அதை உணர்ந்து செயலாற்றி இருக்கிறார். கடமை உணர்வு எதுவுமே இல்லாத கொத்தடிமை எடப்பாடி பழனிச்சாமி. அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

அதேபோல் அரசியலில் தவெக தலைவர் விஜயின் எந்த ஸ்டண்ட்டும் எடுபடாது. ஏனென்றால் நாங்கள் மக்களின் மனதில் இருக்கிறோம். மக்களுடைய மனதில் ஸ்டாலின் இருக்கும் பொழுது வேறு எந்த ஸ்டண்ட்டும் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like