1. Home
  2. தமிழ்நாடு

நான்கு சுவர்களுக்கு உள்ளேயே கட்சியை நடத்தி வருகிறார் விஜய்: கே.பி முனுசாமி..!

Q

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தலை அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது;
டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அ.தி.மு.க.,வினர் சந்தித்தது, கூட்டணிக்காக என்பது உண்மையான தகவல் இல்லை. டில்லியில் கட்டப்பட்ட அ.தி.மு.க., அலுவலக கட்டடத்தை பார்வையிடுவதற்காக இ.பி.எஸ்., சென்றார்.
தமிழகத்தின் நலன், திட்டங்களை பெற மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். இதில் அரசியல் இல்லை.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த கட்சி. எங்களுடன் யார் இணக்கமாக ஒன்றிணைந்து செயல்பட்டாலும் செயல்பட தயாராக உள்ளோம்.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவதும், ஒரு தொண்டனாக இருந்து கூட பணியாற்றுவேன், கட்சி நலனே முக்கியம் என அண்ணாமலையும் பேசுவதும் அவரவர் கருத்து. இது குறித்து அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தொழில்முனைவோர் மாநாடு நடத்தப்பட்டதன் விளைவாக டெல்டா, ஓலா, டாட்டா எலக்ட்ரானிக்ஸ், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோன்றின. தி.மு.க., ஆட்சிக்கு வந்த நான்காண்டு காலங்களில் அது போல ஏதாவது ஒரு நிறுவனம் வந்ததா?
தி.மு.க., த.வெ.க., ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி என நடிகர் விஜய் கூறியிருப்பது அவரது கருத்து. அவர் படங்களை கூட ரிலீஸ் ஆக விடாமல் தி.மு.க., ஆட்சியில் சிரமம் கொடுத்தனர். அ.தி.மு.க., ஆட்சியில் அவருக்கு அதுபோன்ற சிரமம் இல்லை. அந்த மனக்குமுறலின் வெளிப்பாடாக அவர் பேசியுள்ளார். அதிலிருந்து வெளியில் வந்து அரசியல் ரீதியாக விஜய் பேச வேண்டும்.
ஆதவ் அர்ஜுனா எங்கு சென்றாலும் தன்னை முன்னிலைப்படுத்தி பேசுகிறார். அவரை அடையாளம் கண்ட திருமாவளவன் அவரை ஒதுக்கி வைத்தார்.
சினிமா அனுபவம் மிகுந்தவர் விஜய், அவர் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே கட்சியை நடத்தி வருகிறார். மக்களை சந்தித்து அரசியல் செய்யும் பட்சத்தில் அரசியலை புரிந்து கொண்டு அவரும் அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும்.

Trending News

Latest News

You May Like