அதிரடி காட்டிய விஜய்..! பந்தல்காரருக்கு தங்க மோதிரம்..!
தமிழக வெற்றிக் கழகத்தின முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.
மாநாட்டிற்காக இடம் கொடுத்தவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, விவசாயிகளுக்கு மாடு மற்றும் கன்றுகள் வழங்கப்பட்டது. அப்போதே நிலம் கொடுத்தவர்களுக்கு சென்னையில் விருந்தளிக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் மாநாட்டிற்காக இடம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்று பனையூரில் விருந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் விஜய் அவரது கையால் விருந்து அளிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், விஜய் பனையூர் இல்லத்திற்கு வருவதற்கு முன்பே விவசாயிகளுக்கு விருந்து பறிமாறப்பட்டது. விவசாயிகளை வெகு நேரம் காத்திருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் த.வெ.க தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே விருந்து நிகழ்ச்சி துவங்கியது. விவசாயிகள் விருந்து சாப்பிட்ட பின்னர், அவர்களை விஜய் சந்தித்தார்.
தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் சாதம், வடை, பாயாசம் , பொறியல், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், அப்பளம் ஆகியவை விருந்தில் இடம்பெற்றுள்ளது.
மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் அனைவருக்கும் த.வெ.க தலைவர் விஜய் நன்றி தெரிவித்தார். பின்னர் அவர்கள் அனைவருக்கும், கட்சியின் சார்பில் பூ, பழங்கள், ஆடைகள் அடங்கிய கட்டப்பை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு பந்தல் அமைத்த விசுவநாதன் என்பவருக்கு தங்க மோதிரம் ஒன்றை விஜய் பரிசாக அளித்தார்.