"அஜிதாவிடம் விஜய் அன்றே பேசியிருக்கலாம்" - சரத்குமார் விமர்சனம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி செய்த விவகாரத்தில் நடிகர் விஜய் மனிதாபிமானத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்த சரத்குமார், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல்வேறு அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் விவகாரம் குறித்துப் பேசிய சரத்குமார்:
"தூத்துக்குடியில் விஜய் காரின் முன்னால் அஜிதா நின்றபோது, ஒரு பெண்ணாக, மனிதாபிமான அடிப்படையில் விஜய் காரை விட்டு இறங்கி அவரிடம் என்ன குறை என்று கேட்டிருக்கலாம். அதுதான் ஒரு உண்மையான கதாநாயகனுக்கும், தலைவனுக்கும் அழகு. அன்று அவர் இறங்கி இரண்டு வார்த்தைகள் பேசியிருந்தால், இன்று அஜிதா தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதோ அல்லது தூக்க மாத்திரை உட்கொள்ளும் நிலைக்குச் சென்றிருக்கவோ மாட்டார்." விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், தேர்தலைச் சந்திக்காத விஜய் தற்போது தனிநபர் தாக்குதலில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், முறையான கொள்கைகளை முன்வைக்கவில்லை என்றும் விமர்சித்தார். "தேர்தலுக்குப் பிறகுதான் அந்தக் கட்சி இருக்குமா இல்லையா என்பது தெரியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. போதை கலாச்சாரம் பெருகியுள்ளதே இத்தகைய குற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதை திமுக அரசு வரவேற்பதில்லை. மாறாக, நல்ல திட்டங்களுக்குத் தங்கள் பெயரைச் சூட்டிக்கொண்டு, பாதகமானவற்றிற்கு மத்திய அரசைக் குற்றம் சொல்கின்றனர்.
வரும் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், தான் போட்டியிடுவதை விடத் தன்னுடன் பயணிப்பவர்கள் போட்டியிடுவதையே விரும்புவதாகவும் சரத்குமார் தெரிவித்தார். விஜய் இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.