மாநில தவெக செயலர் சரவணன் குடும்பத்துக்கு செல்போனில் விஜய் ஆறுதல்..!
நடிகர் விஜய் கட்சியான தவெக-வின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ல் விக்கிரவாண்டியில் நடக்கிறது. இந்த மாநாட்டு பணிகளில் புதுச்சேரி மாநிலச் செயலர் சரவணன் ஈடுபட்டு வந்தார். மாநாட்டுப் பணிகளில் இருந்து வீடு திரும்பிய அவர் நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம், புதுச்சேரியிலிருந்து தவெக நிர்வாகிகள் புதுச்சேரி சித்தன்குடிக்கு வந்திருந்தனர்.
சரவணன் மறைவை கேட்டு மாநாட்டு பணியில் இருந்த கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவரது வீட்டுக்கு வந்து சரவணனின் உடலைப் பார்த்து கதறி அழுதார். இந்த நிலையில், இன்று காலையில் தவெக தலைவர் விஜய், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சரவணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சரவணனின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.
சரவணன் மறைவையொட்டி கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் புதுவை மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றி கழகத்தின் மீதும் தீரா பற்றுக் கொண்டவர், கழகத்துக்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி சரவணன் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.