1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறாமல் சித்திரை திருநாள் வாழ்த்து கூறிய விஜய் - திமுகவின் B-Team ஆக மாறுகிறதா தவெக?

1

 தமிழ் மொழியைப் பேசக்கூடிய மக்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்.

இத்தகைய நடைமுறைகளை மாற்றி திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் நாளே தமிழ்ப்புத்தாண்டு என அறிவித்து 2008ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அதனைச் செயல்படுத்துவதற்கான அரசாணையையும் பிறப்பித்தார். 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் மீண்டும் சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்த ஜெயலலிதா, சட்டமன்றத்தில் சட்டத்தை இயற்றியதோடு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டுப் பேசினார்.

சோழர் காலத்துக் கல்வெட்டுகளிலும், கொங்கு பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகளிலும் இருக்கும் ஆதாரங்கள், ராமலிங்கம் பிள்ளை அவர்களின் பாடல், சென்னைப் பல்கலைக்கழகத்தால் புதுப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதி என அனைத்து விதமான ஆவணங்களிலும் சித்திரை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்றுக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லாமல் வெறுமனே சித்திரைத் திருநாள் வாழ்த்து எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் தமிழக வெற்றிக்கழகம் எனும் புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கியிருந்தாலும், அக்கட்சியின் கொள்கைகளும் கோட்பாடுகளும்  திமுகவை ஒட்டியே இருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவப் பெருமக்களின் பண்டிகளுக்குத் தவறாமல் வாழ்த்துச் சொல்லும் விஜய், திமுகவின் பாணியில் இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பது ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொல்ல மறுத்திருப்பது கோடிக்கணக்கான தமிழக மக்களை அவமதிக்கும் வகையில் அமைந்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்துவதாக எண்ணி பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களின் பண்டிகைகளைத் தொடர்ந்து திமுக இழிவுபடுத்தி வரும் நிலையில், அதே வழியை விஜய் கையில் எடுத்திருப்பது கடுமையான விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. திமுக கொள்கைகளையே பின்பற்றுவதற்கு எதற்குத் தனிக் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனத் தமிழர்கள் மீது கருணாநிதியால் திணிக்கப்பட்ட சட்டத்தைத் தமிழக மக்களே விரும்பாத நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லாமல் வெறுமனே சித்திரைத் திருநாள் வாழ்த்து மட்டும் தெரிவித்திருப்பது திமுகவும், தவெகவும் வெவ்வேறு இல்லை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பாஜகவை தன் கொள்கை எதிரியாகவும், திமுகவை தன் அரசியல் எதிரியாகவும் அறிவித்திருக்கும் விஜய்யின் செயல்பாடுகள் அனைத்தும் அதற்கு முரணாகவே அமைந்திருக்கின்றன. ஆதி முதல் அந்தம் வரை திமுகவின் சாயலில் தவெக செயல்படுவதையே இந்த தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

Trending News

Latest News

You May Like