திருச்சி பிரச்சாரம் : விஜய் 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதி..!
திருச்சியில் த.வெ.க பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்பது தொடர்பாக த.வெ.க வழக்கறிஞர் பிரிவு சென்னை மண்டல பொறுப்பாளர் ஆதித்ய சோழன், இமயதமிழன் ஆகியோர் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சிபின் மற்றும் தெற்கு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை காவல் துறையினர் விதித்துள்ளனர்.
குறிப்பாக வாகனம் நிறுத்தும் இடத்தை தேர்வு செய்வது, விஜய் பிரச்சார வாகனத்திற்கு முன்பும், பின்பும் அதிக அளவில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் வரக் கூடாது உள்ளிட்ட 23 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விஜய் 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதி
- திருச்சி மரக்கடையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- காலை 10:30 மணியில் இருந்து 11 மணி வரை மட்டுமே அவர் அந்த இடத்தில் பேச முடியும்.
- காலை 9:30 மணி அளவில் மரக்கடை பகுதிக்கு தொண்டர்களை வர வழைத்திருக்க வேண்டும்.
- ரோட் ஷோ நடத்தக் கூடாது.
- விஜய் வரும் பொழுது அவருடைய வாகனத்துக்கு முன்பும், பின்பும் 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. வேறு வாகனங்கள் வந்தால் அனுமதி மறுக்கப்படும்.
- மருத்துவ வசதி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து கொள்ள வேண்டும்.
- குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடாது.
- பொதுமக்கள் யாருக்கும் போக்குவரத்தில் இடையூறு செய்யக் கூடாது.
- கூம்பு வடிவ ஸ்பீக்கர்களை வைக்கக் கூடாது.
- த.வெ.க தொண்டர்கள் மிக நீளமான குச்சி கொடியை கொண்டு வரக் கூடாது.
- பள்ளிக்கு செல்பவர்கள், விமான நிலையம் செல்பவர்கள், மருத்துவமனை செல்பவர்களுக்கு வழி விட வேண்டும்.
- ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட 23 நிபந்தனைகளை திருச்சி மாநகர காவல் துறையினர் விதித்துள்ளனர்.
திருச்சி மாநகர் காவல்துறை தெரிவித்த 23 நிபந்தனைகள் அனைத்தையும் த.வெ.க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதை அடுத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
பிரச்சார பயணத்திற்கான காவல் துறையினரின் அனுமதி கடிதம் மாநகர காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து தவெக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
.png)