கட்டுவிரியன் பாம்பை அடித்துக் கொன்று வீடியோ பதிவேற்றம்; வித்தை காட்டிய யூடியூபர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மலையாண்டி நகரை சேர்ந்தவர் மெய்ஞான செந்தில்குமார்(28). இவர் சமூக வலைதளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராமில் 'ரொம்ப பெருமையா இருக்கு' என்ற பெயரில் பல்வேறு வகையான வீடியோக்களை வெளியிட்டு யூடூபராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த மே 30ம் தேதி இரவு பாம்பு ஒன்று அவரது ஊருக்குள் நுழைந்ததையடுத்து அந்தப் பாம்பை கட்டையால் அடித்து கொன்று அந்த பாம்பு கட்டுவிரியன் பாம்பு என்று கூறி வீடியோ எடுத்து அவரின் சேனலின் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கீரனூர் சரக வனத்துறையினர், மெய்ஞான செந்தில்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பாம்பை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்ட அவர், அந்தப் பாம்பு விஷமில்லாத தண்ணீர் பாம்பு என்றும் தெரிவித்தார். இதையடுத்து, பாம்பை அடித்துக் கொன்று வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக, வனத்துறையின் வனவிலங்கு சட்டம் 1972 பிரிவின் கீழ் மெய்ஞான செந்தில்குமாரை கைது செய்யப்பட்டார்.
பின்னர், விராலிமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.