தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்..!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949ம் ஆண்டு டிசம்பரில் 20ல் பிறந்தவர் ராஜேஷ். பள்ளி ஆசிரியர் பணியை துறந்து அரிதாரம் பூசி சினிமாவில் நடித்தார். 1974ல் கே.பாலசந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். வெள்ளித் திரையில் அறிமுகமான முதல் படம் இது. கன்னிப் பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
இவரது மனைவி ஜோன் சில்வியா ஏற்கனவே இறந்துவிட்டார். திவ்யா, தீபக் என்ற மகளும், மகனும் உள்ளனர். ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் மகள் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்ததும் அடக்கம் செய்யப்படும். இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
1979ல் பிவி பாலகுரு இயக்கிய 'கன்னிப் பருவத்திலே' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதில் வில்லனாக பாக்யராஜ் நடித்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து 'தனிமரம், தைப்பொங்கல், நான் நானேதான்' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தாலும் பாக்யராஜ் இயக்கம், நடிப்பில் வெளிவந்த 'அந்த 7 நாட்கள்' படம் இவரை மேலும் பிரபலமாக்கியது.
தொடர்ந்து 'அச்சமில்லை அச்சமில்லை, ஆலயதீபம், 'சிறை, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' போன்ற படங்கள் இவரது திரைப்பயணத்தில் குறிப்பிடும்படியான திரைப்படங்களாக அமைந்தன. மென்மையான நடிப்பிற்கும், கணீர் குரலுக்கும் சொந்தக்காரரான ராஜேஷ் படங்கள் தவிர்த்து 'அலைகள்', 'ஆண்பாவம்', 'அக்கா', 'களத்து வீடு', 'ரோஜா', 'சூர்யவம்சம்' என ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.
'டும் டும் டும்', 'ஜுட்', 'மஜா', 'உள்ளம் கேட்குமே', 'ராம்' போன்ற படங்களில் மறைந்த மலையாள நடிகர் முரளிக்கும், 'பொய் சொல்லப் போறோம்' படத்தில் மறைந்த மலையாள நடிகர் நெடுமுடி வேணுவிற்கும் டப்பிங் கொடுத்துள்ளார்.
சினிமா தவிர்த்து ரியல் எஸ்டேட், ஹோட்டல் பிஸினஸ் போன்ற தொழில்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர், ஜோதிடம் பற்றி பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதி உள்ளார். இப்படி பன்முக திறமை கொண்ட இவர் தனது 49 ஆண்டுகால கலைப்பயணத்தில் ஏறக்குறைய 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.