1. Home
  2. தமிழ்நாடு

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது...நன்றியுடன் ஏற்கிறேன்..!

1

எல்.கே.அத்வானி பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்.பாரதிய ஜனதா என்ற கட்சியை வாஜ்பாய் மற்றும் எல்.கே.அத்வானி ஆகிய இருவரும் சேர்ந்து தான் 1980ஆம் ஆண்டு தொடங்கினர். தற்போது தொடர்ந்து 2 முறை மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. 1927ஆம் ஆண்டு பிறந்த அத்வானிக்கு தற்போது 96 வயதாகிறது. தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர். பின்னர் ஜன சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். இதன் தொடர்ச்சியாக பாஜகவை தொடங்கி தீவிர அரசியலை முன்னெடுத்தார். மத்திய உள்துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகிய இரண்டு பதவிகளை அதிக நாட்கள் வகித்த பெருமைக்கு உரியவர். 90களில் எல்.கே.அத்வானி நடத்திய ராமர் ரத யாத்திரை மிகவும் முக்கியமானது. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை தான், பெரும்பாலான இந்துக்களின் மனதில் ராமர் கோயில் தொடர்பான வேள்வியை உருவாக்கியது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு அத்வானியின் ரத யாத்திரை நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

96 வயதான எல்.கே. அத்வானிக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இதுதொடர்பாக அத்வானியிடம் பேசி எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். நாட்டின் வளர்ச்சிக்கு அத்வான் அளித்த பங்களிப்பு மகத்தானது. சாதாரண அடிமட்ட தொண்டனாக தனது வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவின் துணை பிரதமராக உயர்ந்தவர். அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட இந்த தருணம், எனக்கு உணர்ச்சிகரமான தருணம்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எல்.கே. அத்வானி. இதுகுறித்து அத்வானி வெளியிட்ட அறிக்கையில், "பாரத ரத்னா விருது என்பது தனி மனிதனாக எனக்கு கிடைத்த மரியாதை அல்ல. எனது லட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் கிடைக்கப் பெற்ற மரியாதையாகவே நினைக்கிறேன். எனக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை பணிவுடனும், நன்றியுடனும் ஏற்கிறேன். இந்த தருணத்தில் எனது குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, எனது மனைவி கமலாவின் தியாகங்களை நினைவுகூர்கிறேன்.

அவர்கள் அனைவரும் எனது வாழ்வில் வலிமையாக இருந்திருக்கின்றனர். எனது 14 வயதில் ஆர்எஸ்எஸ்ஸில் தொண்டனாக சேர்ந்தேன். அன்று முதல் நாட்டுக்காக தன்னலமற்ற சேவையை புரிந்தேன். இந்த வேளையில் எனக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றிய பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மற்றும் வாஜ்பாய் ஆகியோரை நினைவு கூர்கிறேன். அத்துடன், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்" என அத்வானி தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like