1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் D-MART இழுத்து மூட வேண்டும் - வேல்முருகன் கோரிக்கை..!

Q

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ்நாட்டின் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.

உழவர்களை வேளாண்மையிலிருந்து, மீனவர்களை கடல் பகுதிகளிலிருந்து, நெசவாளர்களை துணி உற்பத்தியிலிருந்து தள்ளி விடுகிறது. இவை அனைத்தும் தற்போதைய ஆட்சியாளர்களின் திட்டமிட்ட நோக்கமாகவே உள்ளது.

அந்த பாதையில், சில்லரை வணிகத்திலிருந்தும் சிறு வணிகர்களை வெளியேற்றும் முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரமாக செயல்படுகிறது. ஜி.எஸ்.டி. மற்றும் ஆன்லைன் வர்த்தகம் காரணமாக சில்லரை வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தவறான பொருளாதார கொள்கைகள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.

டி மார்ட், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால், தமிழ்நாட்டின் மளிகை வணிகம் மட்டுமின்றி, சிறு, குறு, நடுத்தர வணிகர்களின் வாழ்வாதாரம் பெரும் நெருக்கடியை சந்திக்கிறது. உணவு, பானங்கள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் விற்பனை கூட இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்காக உள்நாட்டு சில்லரை வணிகர்கள், உழவர்கள், சிறு உற்பத்தியாளர்கள் அனைத்தும் நசுங்க வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் மறைமுக திட்டமாகும்.

எனவே, சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, சில்லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும். தவறான இறக்குமதி, ஏற்றுமதி கொள்கைகளை எதிர்த்து நிற்க வேண்டும்.

இதனால்தான், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முன்னெடுத்துள்ள மாபெரும் போராட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அதில் தோளோடு தோள் நின்று பங்கேற்க இருப்பதாகவும் அறிவிக்கிறோம் என்று தெரிவித்து உள்ளார். மேலும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் காப்பாற்றும் நோக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களின் வியாபாரத்தை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

Trending News

Latest News

You May Like