வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு பட்டம்..!

வேலூர் வி.ஐ.டி. வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் இளவயதினிலே அரசியலில் ஈடுபட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகள் வகித்தார். டாக்டர்.கோ.விசுவநாதன் நிறுவிய வி.ஐ.டி. பல்கலைக்கழகம் நாட்டில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் முதன்மை பல்கலைக் கழகமாக சிறந்து விளங்கி வருகிறது. வி.ஐ.டி. வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் கல்வித்துறையில் பல்வேறு உயரிய சேவைகள் புரிந்துள்ளார். சர்வதேச அளவில் உயர்கல்வியின் வளர்ச்சிக்கு வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் ஆற்றிய பங்களிப்பை கௌரவவிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைகழகம்) கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தனர்.
கடந்த 10-ம் தேதி பிங்ஹாம்டன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் வேந்தர் கோ. விசுவநாதனுக்கு பிங்ஹாம்டன் பல்கலைக் கழத்தின் வேந்தர் ஹார்வி ஸ்டிங்கர் டாக்டர் பட்டம் வழங்கினார். மேலும் அவர் பேசுகையில், இந்தியாவில் உயர்கல்விக்கான பாதையை உலகளவில் விரிவுபடுத்ததலிலும் மற்றும் உலகளவில் தலை சிறந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும் முன்னோடியாக டாக்டர்.கோ.விசுவநாதன் இருந்து வருகிறார் எனக் கூறினார்.
நியூயார்க் மாநில பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர்.கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சட்டமன்ற மேலவை உறுப்பினர் டொன்னா எ.லுப்பாடோ, செனட் உறுப்பினர் லியாவெப், டீன் பேராசிரியர் ஸ்ரீஹரி கிருஷ்ணசாமி, இணைவேந்தர் டாக்டர். டொனால்டு ஹால் மற்றும் நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தின் பல்வேறு உயர் அலுவலர்கள் இடம் பெற்றனர். வி.ஐ.டி. பல்கலைக் கழகம் மற்றும் பிங்ஹாம்டன் பல்கலைக் கழகம் இணைந்து சிறப்பாக செயல்பட காரணமாக இருந்த பேராசிரியர் ஸ்ரீஹரியை பாராட்டினார்கள்.
இந்த நிகழ்வில் வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் .சேகர் விசுவநாதன், டாக்டர். ஜி.வி. செல்வம், உதவித்துணைத்தலைவர் செல்வி. காதம்பரி ச. விசுவநாதன் மற்றும் வி.ஐ.டி. சர்வதேச உறவுகள் துறை இயக்குநர் ஸ்ரீநிவாசன் ஆகியோர் பங்குபெற்றனர். மேலும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் டாக்டர் பட்டம் பெற்ற வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவில் செனட் உறுப்பினர் கண்ணன் ஸ்ரீனிவாசன், அமெரிக்காவுக்கான இந்திய தூதரகத்தின் கல்வி பிரிவு தலைவர் டாக்டர்.பி.கருணாகரன், வடஅமெரிக்க தமிழ் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் பால சுவாமிநாதன், வடஅமெரிக்க தமிழ் சங்கங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள் நாஞ்சில் பீட்டர், சுந்தர் குப்புசாமி, தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் டாக்டர். வீர வேணுகோபால், வடஅமெரிக்க தமிழ் சங்கங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பாலகன் ஆறுமுகசாமி, ரோசெஸ்டர் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைவேந்தர் டாக்டர்.பிரபு டேவிட், மாண்ட்க்ளேர் மாநில பல்கலைக் கழக ( நியூஜெர்ஸி) முன்னாள் மூத்த பேராசிரியர் டாக்டர்.ஜெயச்சந்திரன், ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் துணை டீன் டாக்டர்.ஸ்ரீதேவி சர்மா, அர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் டாக்டர். பன்னீர் செல்வம், வி.ஐ.டி வடஅமெரிக்க முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள வெஸ்ட் வெர்ஜினியா பல்கலைக் கழகம் வி.ஐ.டி வேந்தர்.கோ. விசுவநாதனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.