தவெக தலைவர் விஜய் ஒரு கோமாளி: வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு!
வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய வேலூர் இப்ராஹிம், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், திராவிட மாடல் மக்களை ஏமாற்றும் மாடலாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடாகியுள்ளது. சாராய சாம்ராஜ்யம் இங்கு கட்டியெழுந்துள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வீழ்ச்சி அடையும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பார். விஜய் எதற்காக பாஜகவை விமர்சிக்கிறார்? அவருக்கு என்ன கொள்கை இருக்கிறது? தனக்கென கொள்கையே இல்லை.
கோமாளி போல் நடந்து கொள்கிறார். விஜய் திமுகவின் 'பி டீம்' என்ற பெயரை நாங்கள் வைக்க விரும்பவில்லை. ஆனால் திமுக கூறும் கருத்துகளை அவர் பிரதிபலிக்கிறார். அவர் உண்மையில் தலைவராக இருக்க விரும்புகிறார் என்றால் பாஜகவுடன் கொள்கை ரீதியான நேரடி கலந்துரையாடலுக்கு தயாரா?
விஜய் தேச விரோத கருத்துக்கள் பேசுகிறார். இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுகிறார் என்றால், அவரது எதிர்காலம் பூஜ்ஜியமாகி விடும்.
கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட நிலை தான் விஜய்க்கும் நேரிடும். தற்போதைய கருத்துக் கணிப்புகளின் படி த.வெ.க 6 முதல் 8% வாக்குகள் பெற வாய்ப்புள்ளது.
இது தான் விஜய்யின் முதல் தேர்தல். அதே நேரத்தில் கடைசி தேர்தலாகவும் இருக்கும். பால், அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி குறைப்பால் மக்கள் நன்மை அடைவார்கள். விவசாயிகள் மற்றும் தொழில் துறையினர் பெரும் பயனடைவார்கள். பொருட்களின் உற்பத்தி கூடும். இது ஒரு மாபெரும் வரி சீர்திருத்தப் புரட்சி" என்று வேலூர் இப்ராஹிம் கூறினார்.