வேலூர் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்..!
வேலூர் மக்களைவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார்.கடந்த ஒரு வார காலமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்களிடையே திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்து கூறி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கதிர் ஆனந்த் பிரச்சாரத்திற்கு போகும் இடமெல்லாம் மக்கள் நல்ல ஆதரவை தந்து வேட்பாளரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இளைஞர் அணி தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது அவருக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியது. அனைத்து பகுதிகளுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் வேலூர் கதிர் ஆனந்த் ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார். பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கனடாவில் தற்போது காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த செய்தியைப் பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தது. தமிழ்நாடு முழுவதும் 18 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைகிறார்கள்.திமுக திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது. மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தால் பிள்ளைகள் படிப்பார்கள் என்று நினைத்தவர் காமராஜர். அதேபோன்று பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கத்தான் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது.
“இத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா?
உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கில் கூட, “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. மீட்க வேண்டுமானால் போர்தான் செய்ய வேண்டும்” என ஒன்றிய அரசு கூறியது... நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பும் போதும் “வெளியுறவு கொள்கை” என்று மழுப்பலாக ஒன்றிய அரசு பதிலளித்தது
இப்போது தேர்தல் வந்ததும் கச்சத்தீவு நாடகம் போடுகின்றனர்”
தமிழகத்துக்கு துரோகம் செய்யும் பகுதி நேர அரசியல்வாதிதான் பிரதமர் மோடி. தேர்தல் வந்தால் மட்டுமே மக்களைத் தேடி வருபவர்கள் அல்ல திமுகவினர். மக்கள் சேவகர்கள் திமுகவினர்.பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா?
சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் நம் அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கக் கூட மனம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்களுடன் வெளியே சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் தந்துள்ளோம். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர் விரோத சட்டங்கள் மறுசீரமைக்கப்படும்
கடந்த தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை தோற்கடிக்க தேர்தலை தள்ளிப் பார்த்தார்கள்.ஆனால் வாக்காளர்களான நீங்கள் 'அவர்களை' தள்ளி வைத்து வெற்றியைக் கொடுத்தீர்கள். இந்த தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று முதல்வர் பேசினார்.