மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்!
புயல் காரணமாக நேற்று மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், ராம் நகர், ஏஜிஎஸ் காலனி, வேளச்சேரி, விஜயநகர், தரமணி, கோவிலம்பாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள், வேளச்சேரி மேம்பாலத்தில் தங்களுடைய கார்களை பாதுகாப்பாக்க நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், பள்ளிக்கரணை நோக்கி செல்லும் ரயில்வே மேம்பாலம் மற்றும் தரமணியில் இருந்து வேளச்சேரி 100 அடி சாலை நோக்கி செல்லும் 2 மேம்பாலங்களிலும் பொதுமக்கள் கார்களை நிறுத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த மாதம் பெய்த கனமழையின் போது இதேபோன்று வேளச்சேரி சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பாலங்களில் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
காலை முதலே கனமழை பெய்து வருவதால், போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக, போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் பேருந்து பணிமனை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால், பேருந்துகள் பாதி மூழ்கிய நிலையில் செல்வதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதேபோல், பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ள காடாக காட்சியளிக்கிறது. பூந்தமல்லி மேம்பாலம் மீதும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்லனர். புயல் காரணமாக மழை அதிகரிக்கும் என்பதினால், தண்ணீர் தேங்கும் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.