இனி கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்களுக்கு தடை..!
உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் முறை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் அமல்படுத்தப்பட்டது. இங்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன் இ-பாஸ் அனுமதி குறித்து பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. QR கோடு மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட இ-பாஸ் கொண்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொடைக்கானலில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த செப்.26-ம் தேதி வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் கொடைக்கானல் நட்சத்திர ஏரிப் பகுதி வரை முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதே நேரத்தில், நீளமான பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, நவ.18-ம் தேதி முதல் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் கொடைக்கானல் செல்லும் மலைப் பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி,"பொது நலன் கருதியும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் கொண்ட பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் கொடைக்கானல் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு நவ.18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது" என ஆட்சியர் கூறியுள்ளார்.