வீரப்பன் மகள் வித்யாராணிக்கு நாதக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பதவி..!

நாம் தமிழர் கட்சியை விட்டு பலர் விலகிய நிலையில் புதிய மாநில பொறுப்பாளர்களை நாம் தமிழர் கட்சி நியமித்து வருகிறது. வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீரப்பன் மகள் வித்தியா ராணி நா.த.கவில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.
சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா வீரப்பன் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முதலில் பாமகவில் இருந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், 2020ல் பாஜகவில் இணைந்தார். அதுமட்டுமல்லாமல் பாஜகவில் இணைந்த அவருக்கு, மாநில ஓபிசி அணியின் துணைத் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
இதன்பின் பாஜகவில் இருந்த அவர், திடீரென கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியின் நாதக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜகவில் இருந்தவரை, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவித்தது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. இதன்பின் நாம் தமிழர் கட்சிக்காக தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சித்தப்பா என்று அழைத்து பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். இந்த நிலையில் கட்சியில் சேர்ந்து ஓராண்டு கூட நிறைவடையாத சூழலில், வித்யாராணிக்கு நாதகவில் முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.
வித்யாராணிக்கு நாதக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக நாதகவில் இருந்து மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் ஞானசேகரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த பொறுப்பு வீரப்பன் மகள் வித்யாராணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியுள்ள வித்யாராணிக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.