சென்னையில் இன்று விசிக ஆர்ப்பாட்டம்..!
சென்னையில் 10-ம் தேதி கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக் குழுகூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர்கள் துரை.ரவிக்குமார், சிந்தனைச் செல்வன், முதன்மைச் செயலாளர் பாவரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டின் தீர்மானங்களின் அடிப்படையில், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசும், மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அரசும் முன்வர வேண்டும்.
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் மாநாடு ஒருங்கிணைக்கப்படும். ஒன்றியம் உள்ளிட்ட நிலைகளில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். ‘சாம்சங்’ நிறுவனத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க அரசு அனுமதிப்பதோடு, அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொண்டு, பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னையில் இன்று (அக்.14) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இலங்கை கடற்படையால் கைதான மீனவர்கள், படகுகள் போன்றவற்றை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்குத் தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்.
மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் அமைத்தது மற்றும் எஸ்சி, எஸ்டி துணைத் திட்டத்துக்கான சட்டம் இயற்றியது போன்றவற்றுக்காக தமிழக அரசுக்கு நன்றி. பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். அரசுத் துறைகளில் பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். எஸ்சி இடஒதுக்கீட்டின் அளவை 24 சதவீதமாக உயர்த்த வேண்டும். எஸ்சி பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்களில் இழிவைக் குறிக்கும் வகையிலுள்ள ‘ன்’ விகுதியை பிற்படுத்தப்பட்டோருக்கு மாற்றப்பட்டது போல ‘ர்’ என முடியும் வகையில் மாற்ற வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.