இனி இவர்களுடன் தான் தேர்தல் கூட்டணி என்று விசிக தலைவர் திருமவளவன் அறிவிக்க வேண்டும் - பாஜக..!
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மூன்று நாட்களாக ஆட்சியில் பங்கு என்ற தொனியில் விசிக தலைவர் திருமாவளவன் ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்கி புதிதாக தன் கட்சியில் இணைத்துக் கொண்ட ஒரு தொழிலதிபரின் ஆசை வார்த்தைகளால் கவரப்பட்டு, அதன் அடிப்படையில் மனதின் குரலாகவும், அட்மின் குரலாகவும் ஊடகங்களில் பொய் பிம்பங்களை உருவாக்கி பரப்பி வருகிறார். அரசியல் சுயநலத்துக்காகவும், அவர் எதற்காக கட்சி ஆரம்பித்தார் என்று மக்களிடம் விளக்கமாக குறிப்பிட்ட கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மறந்துவிட்டு தற்போது ஏதோ புதிய பாதையை தேர்ந்தெடுத்து விட்டது போல் புதிய நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
தேர்தல் கூட்டணி பேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இன்று சீட்டு வாங்கி ஜெயித்தவுடன் தற்போது இல்லாத உரிமைக்கு, இது கட்சியின் ஆசை, கடந்த கால திட்டம், எதிர்கால லட்சியம் என்று பேசி வருவது உண்மையா? என்ற சந்தேக கேள்வி அனைவரும் மனதிலும் எழுந்துள்ளது. கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியுடன் தான், இனி உறவு, இனி தேர்தல் கூட்டணி என்று விசிக தலைவர் திருமவளவன் துணிந்து அறிவிக்க வேண்டும். அதை விடுத்து புதிய செய்திகளை பரப்பி தங்களையும் குழப்பிக்கொண்டு அனைவரையும் குழப்ப முயற்சிக்க வேண்டாம்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதில் பாஜகவும், பாமகவும் நீண்ட காலமாக தன்முனைப்புடன் மிகப்பெரிய விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளது. இன்று பாஜக மற்றும் பாமக கட்சிகள் இல்லாமல் மதுவிலக்கு ஆதரவு மாநாடு நடத்துவேன் என்று கூறியதில் இருந்து உங்களின் சுயநல அரசியலும், உள்நோக்கமும் அனைவருக்கும் புரிந்து விட்டது.
நீங்கள் மதுவிலக்கு கூட்டம் என்ற பெயரில் அரசியல் கூட்டணிக்கு ஆதரவு தேடுவதற்கு மடைமாற்றம் செய்ய பயன்படுத்துவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதை உணர வேண்டும். மக்கள் விரோத திமுக அரசை தமிழகத்தில் அகற்றுவோம் என்று அறிவியுங்கள். தமிழக மக்கள் உங்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தை தானாக தருவார்கள். அதைவிடுத்து அரசியல் நாடகங்களை நடத்தாமல் தமிழக நலனில் அக்கறையுடன் செயல்படும் கட்சிகளோடு இணைந்து செயல்படுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.