இன்று வரலட்சுமி விரதம்..! வரலட்சுமி பூஜை செய்வதற்கான நேரம் இதோ..!
இன்று மகாலட்சுமியிடம் வழிபட்டு வேண்டிய வரங்கள் அனைத்தையும் பெறுதற்கு ஏற்ற நாளாகும். அஷ்ட லட்சுமிகளையும் இந்த நாளில் வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற முடியும். வரம் தரும் லட்சுமி என்பதால் அவளை வரலட்சுமி என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். வரலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, பூஜை செய்வதால் வீட்டில் எப்போதும் செல்வ வளம் நிறைந்திருக்கும்.
மகாலட்சுமியின் அருளை பெருவதற்காக கடைபிடிக்கப்படும் எத்தனையோ முக்கியமான விரதங்களில் ஒன்று வரலட்சுமி விரதம்.தென்னிந்தியாவில் இது வரலட்சுமி விரதம் என்ற பெயரிலும், வடஇந்தியாவில் மகாலட்சுமி விரதம் என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
வரலட்சுமி விரதத்தை இருவிதமாக சொல்வதுண்டு. அதாவது வரங்களை தரும் லட்சுமி தேவியை வழிபடும் நாள் என்றும், லட்சுமியை வீட்டிற்கு அழைத்து வரங்களை பெறுவதற்கு ஏற்ற நாள் என்றும் சொல்லப்படுகிறது. வரலட்சுமி என்பவள் செல்வ வளம், தைரியம், ஞானம், குழந்தை வரம் உள்ளிட்ட வரங்களை அருள்பவள் ஆகும். இந்த நாளில் அஷ்டலட்சுமி வழிபாடு செய்வதையும் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
வரலட்சுமி விரத வழிபாட்டினை இரண்டு முறையாக கடைபிடிக்கலாம். ஒன்று படம் வைத்தும் வழிபடுவது, மற்றொன்று கலசம் வைத்து வழிபடுவது. இந்த ஆண்டு மட்டும் வரலட்சுமி விரதம் கடைபிடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் படம் வைத்து வழிபடலாம். தொடர்ந்து அனைத்து வருடங்களும் வரலட்சுமி விரதம் இருக்க முடியும் என்கிறவர்கள் கலவசம் வைத்து வழிபடலாம். முதல் முறையாக வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் படம் வைத்து வழிபடலாம். வரலட்சுமி விரதம் என்பது மூன்று நாட்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். மகாலட்சுமியை வியாழக்கிழமையே அழைத்து, வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை செய்து, சனிக்கிழமை புனர்பூஜை செய்து வழிபடலாம். அப்படி முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை காலையே அழைத்து, அன்றே பூஜை செய்து, ஞாயிற்றுக்கிழமை புனர்பூஜை செய்தும் வழிபடலாம். படம் மட்டும் வைத்து வழிபடுபவர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வழிபட்டால் போதும்.
புராணங்களின் படி, ஒருமுறை சிவனும் பார்வதியும் பரமபதம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதில் சிவ பெருமான் வெற்றி பெற்றார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத பார்வதி தேவி, சித்ரமணியை அழைத்து இந்த விவகாரத்திற்கு தீர்ப்பு சொல்லும்படி கேட்டார். சித்ரமணியும், சிவ பெருமானே வெற்றி பெற்றதாக தெரிவித்தது. இதனால் கோபமடைந்த பார்வதி தேவி, சித்ரமணியை தொழு நோயால் பாதிக்கும் படி சாபம் அளித்தார். பிறகு பார்வதியை சமாதானம் செய்த சிவ பெருமான், உண்மையை உரிய வைத்தார். சித்தரமணி மீது இரக்கம் கொண்ட பார்வதி, வரலட்சுமி விரதம் கடைபிடித்தால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என அருளினாள். சித்ரமணியும் வரலட்சுமி விரதம் இருந்து, சாப விமோசனம் பெற்றார்.
மற்றொரு புராண கதையின் படி, தனது தீவிர பக்தையும் பரம ஏழையுமான சாருமதியின் கனவில் காட்சி கொடுக்க லட்சுமி தேவி, வரலட்சுமி விரதம் இருக்கும் படி தெரிவித்தாள். அவளும் கிராமத்தில் உள்ள சில பெண்களுடன் சேர்ந்து வரலட்சுமி விரதம் இருந்தாள். அதன் பலனாக வறுமை நீங்க செல்வ செழிப்பான வாழ்க்கை சாருமதி பெற்றாள். அன்று துவங்கி ஆண்டுதோறும் இந்த நாளில் வரலட்சுமி விரதம் இருக்கும் வழக்கம் ஏற்பட்டது.
பாவிஷ்ய புராணத்தின் படி, மகாபாரதத்தில் சூதாட்டத்தில் நாடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்த பாண்டவர்களில் மூத்தவரான தர்மனிடம், வரலட்சுமி விரதம் இருக்கும் படி கிருஷ்ணர் அறிவுறுத்தினார். அந்த அறிவுரையை ஏற்று தர்மரும் தொடர்ந்து வரலட்சுமி விரதம் கடைபிடித்தார். இதனால் இழந்த தனது நாடு உள்ளிட்ட அனைத்தையும் அவர் திரும்பப் பெற்றதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 16ம் தேதி, ஆடி மாதத்தின் கடைசி நாளும், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் வருகிறது. அன்றைய தினம் பெருமாளுக்கு உரிய ஏகாதசி மற்றும் துவாதசி திதிகள் சேர்ந்த நாளாக வருகிறது. அது மட்டுமல்ல சரஸ்வதி தேவி மற்றும் ஆஞ்சநேயர் அவதரித்த மூல நட்சத்திரத்துடனும், பூராடம் நட்சத்திரத்துடனும் இணைந்து வருகிறது. பூராடம் நட்சத்திரம் பிரகஸ்பதிக்கும், ஈசனுக்கும் உரிய நட்சத்திரமாகும். இதனால் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறுவதற்கு ஏற்ற அற்புதமான நாளாக இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பு அமைகிறது.
வரலட்சுமி பூஜை செய்வதற்கான நேரம் :
ஆகஸ்ட் 16 - காலை 9 முதல் 10.20 வரை
மாலை 6 மணிக்கு மேல்
புனர் பூஜை செய்வதற்கான நேரம் :
ஆகஸ்ட் 17 - காலை 07.35 முதல் 08.55 வரை
காலை 10.35 முதல் 12 வரை
ஆகஸ்ட் 18 - காலை 07.45 முதல் 08.45 வரை
காலை 10.45 முதல் 11.45 வரை
படம் வைத்து வழிபடுபவர்கள் மகாலட்சுமியின் படத்தை நன்கு அலங்கரித்து, வீட்டு வாசலுக்கு எடுத்துச் சென்று, மகாலட்சுமிக்குரிய மந்திரங்கள் சொல்லி, பூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வந்து வழிபடலாம். கலசம் வைத்து வழிபடுபவர்கள் எவர்சில்வர் தவிர செம்பு, தாமிரம், வெள்ளி, மண் என எவற்றாலும் ஆன கலசத்தை பயன்படுத்தலாம். அதற்கு மஞ்சள் நூல் சுற்றி, முக்கால் பாகம் அளவிற்கு பச்சரிசி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதோடு மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, காதோலை கருகமணி, ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, மாசிக்காய், நாணயங்கள் ஆகியவற்றை போட்டுக் கொள்ளவும். ஒரு தேங்காயை மஞ்சள், சந்தனம் கலந்து பூசி எடுத்து, அதை கலத்தின் வாய் பகுதியில் மாவிலையுடன் சேர்த்து வைக்க வேண்டும். அம்பாளின் முகம் வைத்திருப்பவர்கள் முகம் வைத்து புடவை, நகைகள், ஜடை ஆகியவை வைத்து அழகாக அலங்கரித்துக் கொள்ளலாம்.
அம்பாளாக அலங்கரித்த கலசத்தை வாசலுக்கு எடுத்துச் சென்று, வீட்டில் மூத்த சுமங்கலி பெண்கள் இருந்தால் அவர்கள் ஆரத்தி காட்டி அம்பாளை வீட்டிற்குள் அழைத்து வந்து, ஒரு மனைப்பலகையில் வைக்கலாம். மாக்கோலமிட்டு, மனைப்பலகை இல்லை என்றால் ஒரு தாம்பூலம் அல்லது வாழை இலையில் அரிசி அல்லது நெல் பரப்பி, அதன் மீது இந்த கலசத்தை வைக்கலாம். கிழக்கு அல்லது வடக்கு திசையில் கலசத்தை வைப்பது சிறப்பு. அம்மனுக்கு நைவேத்தியமாக வடை, சுண்டல், பருப்பு பாயசம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், கொழுக்கட்டை என எது வேண்டுமானாலும் படைக்கலாம். அனைத்து செய்ய முடியாவிட்டாலும் ஏதாவது ஒன்றை எளிமையாக செய்து படைக்கலாம். அன்றைய தினம் அம்பாளுக்குரிய கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி ஆகியவற்றை படிக்கலாம்.
வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து, தாமரை மலர்கள் கிடைத்தால் வைக்கலாம் இல்லாவிட்டால் மல்லிகைப்பூ பயன்படுத்தலாம். அர்ச்சனைக்கு துளசி, வில்வம், அருகு ஆகியவை பயன்படுத்துவது சிறப்பு. முடியாதவர்கள் சாதாரண மலர்கள், குங்குமம், அக்ஷதை என எந்த பொருள் முடிகிறதோ அதைக் கொண்டு அம்பிக்கைக்குரிய நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம். அதோடு நோம்பு சரடினையும் இரண்டு பூ வைத்து கட்டி அம்மனின் பாதத்தில் வைத்து, பூஜை செய்ய வேண்டும். இந்த வழிபாடுகள் அனைத்தையும் வெள்ளிக்கிழமை காலை 10.20 மணிக்குள்ளாக முடித்து அம்மனுக்கு ஆரத்தி காட்டி, பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தாலிச்சரடு மாற்றிக் கொள்பவர்களும் இந்த நேரத்திற்குள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை புனர்பூஜை செய்பவர்கள் பூஜை அறையில் உள்ள கலசத்தை எடுத்துச் சென்று, சமையலறையில் வைத்திருக்கும் அரிசி பாத்திரத்திற்குள் வைத்து விடுங்கள். "எங்கள் வீட்டில் நீ எப்போதும் நிரந்தமாக வாசம் செய்ய வேண்டும். வீட்டில் எப்போதும் உன்னுடைய அருளும், குறைவில்லாத செல்வமும் இருக்க வேண்டும்" என வேண்டிக் கொண்ட பிறகு, மேலே இருக்கும் தேங்காயை எடுத்து ஏதாவது இனிப்பு செய்வதற்கு பயன்படுத்தலாம். உள்ளே இருக்கும் நாணத்தை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். எலுமிச்சை, மாவிலை, காதோல கருகமணி ஆகியவற்றை பூஜையறை குப்பையில் சேர்த்து விடலாம். கலசத்தில் வைத்த வாசனை பொருட்களை சமைலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அரிசியில் சர்க்கரை பொங்கல் வைத்து சாப்பிடலாம்.