லஞ்சம் கேட்கும் விஏஓ.. பிச்சையெடுத்த மூதாட்டி... எப்போது தீரும் இந்த கொடூரம் !

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஜோதிமணி(63). கூலி தொழிலாளியான இவரது மருமகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனால், சொத்துகளை மருமகள் பிரியாவின் குழந்தைகள் பெயருக்கு மாற்ற முடிவு செய்தார். அதன்படி மாத்துார் கிராம நிர்வாக அலுவலகம் சென்று விஏஓ ., சந்தோஷிடம் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்தார். அவர் இழுத்தடிக்கவே, சில நாட்களுக்கு முன் நேரில் சென்று கேட்டுள்ளார்.
அப்போது, வி.ஏ.ஓ., 3,௦௦௦ ரூபாய் கொடுத்தால் உடனடியாக வாசிசு சாண்றிதழ் கிடைக்கும் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மூதாட்டி வீடு திரும்பினார்.
இந்நிலையில், அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு பேத்திகளுடன் சென்ற மூதாட்டி ஜோதிமணி பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினார்.
வாரிசு சான்றிதழ் வழங்க வி.ஏ.ஓ., லஞ்சம் கேட்கிறார். ஆனால் என்னிடம் பணமில்லை என்பதால் எனவே பிச்சை போடுங்கள் என எழுதிய பதாகையை, ஒரு பேத்தி கைகளில் பிடித்திருக்க வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு சிலர் மூதாட்டிக்கு பணம் அளித்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற தாசில்தார் மாரிமுத்து மூதாட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததையடுத்து அவர் பேத்திகளுடன் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இதுபோன்று வயதானவர்களிடம் கூட பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in