அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடி மட்டும்தான் - வானதி சீனிவாசன்..!
மதுராந்தகத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் கூட்டத்தில் பேசிய சீமான், "நானும் ஐயா ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. உங்கள் வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்துக்கும் அவரை கூப்பிட்டு கூட வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள்.
ஏன் தெரியுமா? காரணம், ரஜினிகாந்த் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அரசியலில் நான் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சேர்ந்ததால் பயந்துவிட்டார்கள்" என பேசியிருந்தார்.
அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன், "சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது அவரவர்களே கொடுத்துக் கொள்ளக் கூடாது. சிறந்த தலைவர் என பிரதமர் மோடிக்கு உலக நாடுகள் பட்டம் அளிப்பதால் மோடி தான் சூப்பர் ஸ்டார்" எனத் தெரிவித்தார்.