உஷார்! வேலை தேடும் பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் கும்பல்!!

வேலை கேட்டுவந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை மேற்கொண்டதில் 3 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பெண்கள் மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மேலும் சில பெண்கள் கோவளத்தில் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
விடுதியின் உரிமையாளரான செந்தில்குமார் என்பவர் தங்களுக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாக தெரிவித்தனர்.
மகேந்திரன் மற்றும் சிவக்குமார் என்ற இடைத்தரகர்கள் மூலம் பெண்களின் போட்டோக்களை ஆன்லைன் மூலம் அனுப்பி 10,000 முதல் 20,000 வரை கட்டணம் நிர்ணயித்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
சொகுசு விடுதியின் மேலாளர் பாபு, இடைத்தரகர் சதீஸ் மற்றும் ஓட்டுநர் திலீப் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவளம் விடுதியில் இருந்த 5 பெண்களையும் மீட்டனர்.
மேலும் அங்கு இருந்த இடைத்தரகர்களான மகேந்திரன், சிவக்குமார், சரவணன் ஆகியோரையும் விடுதி உரிமையாளரான செந்தில் குமார் என்பவரையும் கைது செய்தனர்.
newstm.in