நீயா நானா போட்டியில் அமெரிக்காவும் சீனாவும்..!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார் அதிபர் டொனால்டு டிரம்ப்.
நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.
இதற்கிடையே கனடாவும் அமெரிக்க பொருட்கள்மீது 25 சதவீத வரி விதித்தது. தொடர்ந்து கனடா, மெக்சிகோ தலைவர்களுடன் போனில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு நாடுகளுக்கான வரிவிதிப்பு உத்தரவை அடுத்த ஒரு மாதத்துக்கு மட்டும் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
ஆனால் சீனாவுக்கான 10 சதவீத வரியில் மாற்றம் இல்லை. எனவே தற்போது அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு உள்ளிட்டவற்றிக்கு 15 சதவீத வரியும், விவசாய உபகரணங்கள், கச்சா எண்ணெய்மீது கூடுதலாக 10 சதவீத வரியும் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவுக்கு அரிய உலோகங்களை ஏற்றுமதி செய்வதற்கும் சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் ஏகபோக செயல்பாடுகள்குறித்து விசாரணை நடத்த சீனா அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராகச் சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் வழக்கு தொடரப்படும் எனச் சீனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.