வரும் 12ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கா..?: பிரபல நாட்டின் அரசு விளக்கம்..!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேற்கு ஐரோப்பா நாடான ஆஸ்திரியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால், அந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 22-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இந்த முழு ஊரடங்கு, கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தபட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டிசம்பர் 11-ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து ஆஸ்திரியா அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில், அமலில் உள்ள முழு ஊரடங்கு வரும் 11-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு ஆஸ்திரிய அரசு பதில் கூறியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரிய அதிபர் கார்ஸ் நெஹாம்மர் கூறியதாவது: “வரும் ஞாயிற்றுக்கிழமை பிறகு முழு ஊரடங்கு இல்லை. ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு தொடரும். அவர்கள் அத்தியாவசியம் இன்றி வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தியதன் பயனாக நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இருப்பதோடு, தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. இருப்பினும், ஹோட்டல்கள், விடுதிகளில் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்” என்று அவர் கூறினார்.