யுபிஎஸ்சியின் தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா..!
தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மனோஜ் சோனி கூறியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு யுபிஎஸ்சியின் உறுப்பினரான சோனி, கடந்த 2023ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி அந்த அமைப்பின் தலைவரானார்.அவரது பதவிக்காலம் வரும் 2029ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் இருக்கும் முன்பே மனோஜ் சோனி ராஜினாமா கடிதம் அனுப்பியது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அதேநேரம் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகிவில்லை.
மனோஜ் சோனியின் ராஜினாமா முடிவுக்கும், போலி சான்றிதழ்களை கொடுத்து மத்திய அரசு பணி பெறுவதாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறப்படுகிறது.
குஜராத்தில் உள்ள சுவாமிநாராயண் பிரிவின் கிளையான அனூபம் மிஷனில், தொண்டு செய்வதில் அதிக நேரம் செலவிட விரும்புவதாக மனோஜ் சோனி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் மனோஜ் சோனி கடந்த 2005ஆம் ஆண்டில் 40 வயதாக இருந்த போது குஜராத் மாநிலம் வதோதராவின் புகழ்பெற்ற எம்எஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அதன் மூலம் நாட்டின் இளம் வயது துணை வேந்தர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.