உ.பி முதல்வர் பேச்சால் சர்ச்சை : தாஜ்மகாலை கட்டிய கலைஞர்களின் கைகள் துண்டிப்பு..!
மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் உலக இந்துக்களின் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நடைபெறுகிறது. டிசம்பர் 13 தொடங்கிய கருத்தரங்கு இன்று நிறைவு பெறுகிறது. இதில் நேற்று கலந்துகொண்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் தாஜ்மகால் மற்றும் ராமர் கோயில் கைவினைஞர்களை ஒப்பிட்டு தனது உரையில் பேசியதாவது:-
இன்று இந்தியாவில் பாஜக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. அனைத்து வகையானப் பாதுகாப்பும் அவர்களுக்கு அரசால் அளிக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் பிரதமர் நரேந்திரமோடி, ராமர் கோயிலை கட்டிய கைவினைஞர்கள் மீது மலர்களை தூவி கவுரவப்படுத்தினார். ஆனால், ஆக்ராவில் தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. அதேபோல், மிகவும் உயரியவகை துணிகளை நெய்தவர்களின் கைகளும் அக்கால ஆட்சியாளர்களால் துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாக இன்று அந்தவகை பாரம்பரியமிக்கக் கலாச்சாரத் துணிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இவ்வாறு அவர் பேசினார்.