1. Home
  2. தமிழ்நாடு

தான் பேசிய பேச்சுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்ட மத்திய அமைச்சர்..!

1

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, இந்த ஆண்டு மார்ச் மாதம் பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது ஊடகங்களிடம் தெரிவித்த கருத்து, தமிழர்கள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சரின் வழக்குரைஞர் ஆர். ஹரிபிரசாத் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழக மக்களைப் பற்றி நான் கூறியதாகக் கூறப்படும் கருத்து உள்நோக்கம் கொண்டதல்ல. தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் கூறிய கருத்துகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரின் உணர்வுகளை புண்படுத்தியிருப்பதை உணர்ந்து, எனது முந்தைய கருத்துகளைத் திரும்பப் பெற்று, சமூக வலைதளங்களில் ஆழ்ந்த மன்னிப்புக் கேட்டேன்.

செழுமையான கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு கொண்ட தமிழக மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனது கருத்துகளால் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக தமிழக மக்களிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீதி வழங்கப்படுவதை கருத்தில் கொண்டு தயவுசெய்து இதனை பதிவு செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராமேஸ்வரம் கஃபே மீதான தாக்குதலை அடுத்து ஷோபா கரந்தலாஜே அளித்த பேட்டியை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் பார்த்த மதுரையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர், மதுரை நகர சைபர் கிரைம் போலீஸில் கடந்த மார்ச் 20-ம் தேதி புகார் அளித்தார். அந்தப் புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதனை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்தலாஜே மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் கடந்த ஜூலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​மத்திய அமைச்சர் பத்திரிகையாளர்களை அழைத்து மன்னிப்பு கேட்டால், அவர் மீதான வழக்கை கைவிட அரசு தயாரா என்பதை அறிய விரும்புவதாக நீதிபதி தெரித்திருந்தார். மன்னிப்பு கடிதத்தை ஊடகங்கள் முன் மத்திய அமைச்சர் வாசித்தால், அவருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யலாம் என்று அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சரின் வழக்கறிஞர் ஹரிபிரசாத், “அமைச்சர் ஷோபா கரந்தலாஜே ஏற்கெனவே ஊடகங்கள் முன்பு மன்னிப்பு கேட்டுவிட்டார். அதோடு, நீதிமன்றத்திலும் மன்னிப்பு கோரி பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்” என வாதிட்டார். அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், பிரமாணப் பத்திரத்தை பரிசீலித்து தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். அவரது வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரும் மனுவை அடுத்த விசாரணைக்காக வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Trending News

Latest News

You May Like