மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கும் மாநில தலைவர் தேர்தலுக்கும் தொடர்பில்லை - அண்ணாமலை..!

சென்னையில் குமரி அனந்தன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
மத்திய உள்துறை அமைச்சர் வருவது உறுதி. இன்று இரவு வருகிறார்கள். நாளை மாலை வரை இருக்கிறார்கள். எதற்கு வந்து இருக்கிறார் என்று நாளை அதிகாரபூர்வமாக தெரிவிப்போம். மாநில தலைவர் தேர்தலுக்கும், அமித்ஷா வருகைக்கும் சம்பந்தமில்லை.
அவர் வருவது கட்சியின் தலைவர்களை சந்திப்பதற்கு, எப்போதும் அவர் சந்திப்பார். பீஹாரில் 4 நாட்கள் இருந்தார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தார். அரசியல் நிலவரங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். தமிழகத்திலும் அதே போன்ற பயணமாக தான் பார்க்க வேண்டும். முறைப்படி நாளை பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவிப்போம் என பேசினார்.
மேலும், நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டம் தொடரும் என தீர்மானம் நிறைவேற்றுவது புதிது கிடையாது. இதற்கு முன்பு கூட தீர்மானம் நிறைவேற்றினார்கள். நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு தான் போகிறது. மாநில அரசு அனுப்பிய தீர்மானத்தை ஜனாதிபதி திரும்ப அனுப்பினார்.
எங்களை பொறுத்தவரை நீட் தேர்வு நல்லது தான் செய்து கொண்டு இருக்கிறது. ஏழை மாணவர்கள் நீட் தேர்வால் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போய் கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு நீட் விவாதம் தேவையற்றது. இதனால் தான் அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ., பங்கேற்கவில்லை என கூறினார்.