வரலாற்று சாதனை படைக்க இருக்கும் மத்திய நிதி அமைச்சர்..! மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்கும் நிர்மலா சீதாராமன்..!
கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமான விழாவில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார் மோடி.
மோடியின் 3.0 அமைச்சரவையில் மத்திய நிதியமைச்சராக மீண்டும் பதவியேற்றார் நிர்மலா சீதாராமன். மீண்டும் நிதியமைச்சராகப் பதவியேற்ற அவர் 2024 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதன் மூலம் அவர் மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்கப் போகிறார். அதாவது நிதியமைச்சர் சீதாராமன் தொடர்ச்சியாகத் தனது 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் நிதியமைச்சராகத் தொடர்ந்து ஆறு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடிக்க உள்ளார்.
நிர்மலா சீதாராமன் கடந்த 5 ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்துள்ளார். இப்போது வரை அவர் 2019 முதல் 2023 வரையிலான 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். இதில் தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்த 2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டும் அடங்கும். பிப்ரவரி 2024 இல் ஒரு இடைக்கால பட்ஜெட்டை போட்டதன் மூலம், அவர் தொடர்ந்து ஆறு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இது அவரது ஏழாவது பட்ஜெட் ஆகும். மேலும் மோடியின் ஆட்சிக் காலம் இன்னும் 5 ஆண்டுகள் அவரை நீடித்தால், நிர்மலாவின் பட்ஜெட் பட்டியல் மேலும் கூடும். ஆக, தொடர்ந்து 7 பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ள அவர், வரும் காலங்களில் தேசாயின் 10 பட்ஜெட் என்ற ரெக்கார்டையும் முறியடிக்கப் போகிறார். இதில் சிறப்பு என்னவென்றால், ஒரு ஆண் நிதியமைச்சர் 60 ஆண்டுகளுக்கு முன்பு செய்த சாதனையை இப்போது ஒரு பெண் நிதியமைச்சராக நிர்மலா முறியடித்துக் காட்டியுள்ளார்.
2017 முதல் 2019வரை பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 2வது பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு நாட்டின் 2வது பெண் நிதியமைச்சரும் இவர்தான்.
தற்போதுள்ள மோடி அமைச்சரவையில் உள்ள பாஜக மூத்த தலைவர்களில் நிர்மலா சீதாராமனும் ஒருவர். 1959இல் பிறந்த இவர், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதுவரை அவர் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடாமலே நிதியமைச்சராகப் பதவி வகித்து வருகிறார் என்பதும் முக்கியமான தகவல்.
.png)