பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்..!வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா?
பாராளுமன்ற மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
2024 – 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும் அல்வா தயாரித்து விநியோகிக்கும் நிகழ்ச்சி ஜூலை 16 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமான முறையில் பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நிதியமைச்சர் வழங்கினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று முன்தினம் அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டம் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு நடைபெற்றது. பாராளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதனை அடுத்து பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வரலாற்று சாதனை படைக்கவுள்ளார்.
இதன்மூலம் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடிக்கவுள்ளார். பிரதமர் மோடியின் 2-வது பதவிக் காலத்தில் கடந்த 2019ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின் தொடர்ந்து 4 முழு பட்ஜெட்களையும், நிகழாண்டு பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டையும் அவர் தாக்கல் செய்தார்.
இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட். இந்த பட்ஜெட் குறித்து தொழில்துறையினரும், சாமானிய மக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். வரி செலுத்துவோர் வரிச்சலுகையை எதிர்பார்க்கும் நிலையில், தொழில் துறையினரும் இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளதால், இந்த பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா ? என்ற எதிர்பார்ப்புகள் மக்களிடையே அதிகரித்துள்ளது. முன்னதாக, 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை, மத்திய நிதிநிலை அறிக்கையில் விடுவிக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
.png)