1. Home
  2. தமிழ்நாடு

ஒன்றிய பா.ஜ.க. எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன - செல்வப்பெருந்தகை..!

1

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. சமீபத்தில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம், பாம்பன் பாலம் அருகே தமிழக மீனவர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தமிழக வருகையின் போது காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 18 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.

இந்நிலையில் கடலில் 32 நாட்டிகல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினருடைய தாக்குதலுக்கு ஆளாவதை தடுத்து நிறுத்துவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசோடு பேசி உரிய தீர்வு காண வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2013 ஆம் ஆண்டு பா.ஜ.க.வினர் ராமேஸ்வரத்தில் நடத்திய கடல் தாமரை மாநாட்டில் பங்கேற்ற சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் 2014 தேர்தலுக்கு பிறகு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் நலன்களை பாதுகாக்க ஒன்றிய அரசில் தனி அமைச்சகம், மீனவர் கைது, படகுகள் பறிமுதல் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக, ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டு இரு நாட்டு மீனவர்களிடையே ஏற்படுகிற பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு வரை அந்த கூட்டு நடவடிக்கைக்குழு ஐந்து முறை கூடியது. ஆனால், 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த கூட்டுக் குழு கூட்டப்படவில்லை. இத்தகைய அலட்சியப் போக்கின் காரணமாக மீனவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்தவித அணுகுமுறையையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பின்பற்றவில்லை. தமிழக மீனவர்கள் ஏன் கைது செய்யப்படுகிறார்கள் ? படகுகள் ஏன் பறிமுதல் செய்யப்படுகிறது ? இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த எந்தவிதமான முயற்சிகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்ய முன்வரவில்லை. இந்த பிரச்சினைக்கான உரிய தீர்வுகள் காணப்படாத நிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையான கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

எனவே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப் படவில்லையெனில் கடும் விளைவுகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

Trending News

Latest News

You May Like