பஜ்ரங் புனியாவிற்கு அடையாளம் தெரியாத நபர் கொலை மிரட்டல்..!
ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 5ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
காங்கிரசின் அழைப்பின் பேரில், ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, 30, அதே மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை வினேஷ் போகத், 30, இருவரும் இணைந்தனர். இதையடுத்து, அகில இந்திய கிசான் காங்கிரசின் செயல் தலைவராக பஜ்ரங் புனியாவிற்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. வினேஷ் போகத் தேர்தலில் களம் இறங்குகிறார்.
மல்யுத்த வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பஜ்ரங் புனியாவிற்கு, இரண்டே நாட்களில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல்வந்துள்ளது. வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து அவருக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டது.
காங்கிரஸை விட்டு விலகி விடுங்கள். இல்லையென்றால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எங்களை எதிர்கொள்ள நேரிடும். இது எங்களின் இறுதிச் செய்தி. நாங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை ஹரியானா சட்டசபை தேர்தலுக்கு முன் உங்களுக்குக் காண்பிப்போம்.
நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யலாம், ஆனால் இது எங்களின் முதல் மற்றும் கடைசி எச்சரிக்கை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பஜ்ரங் புனியா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது என சோனிபட் எஸ்பி ரவீந்திர சிங் கூறினார்.