வேலையில்லா பட்டதாரிகளே.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில், படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை, 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வி அடைந்துள்ள அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் விண்ணப்பிக்கலாம். இத்தகைய உதவித்தொகையை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு ஆண்டும், மற்றவர்களுக்கு குறைந்தது 5 ஆண்டும் முடிவடைந்திருக்க வேண்டும்.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரியக் கூடாது. வயது வரம்பு SC, ST பிரிவினருக்கு 45, இதர பிரிவினருக்கு 40, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாய், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய் மற்றும் பட்டதாரிகளுக்கு 1000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று, மாற்றுத் திறனாளிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு 600 ரூபாய், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாய் மற்றும் பட்டதாரிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகை பெறக்கூடிய அறிவிப்பானது தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் அளிக்கலாம்.
அவ்வாறு அளிக்கப்படும் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தை இணைத்து வரும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.