தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா. விருது..!
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் விருது மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் சார்பில் உணவு பாதுகாப்பு துறையில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாவது இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட விருது, ஆகிய இரண்டு விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
மக்களைத் தேடி மருத்துவம் எனும் உன்னதமான திட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலினால் 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக இதயம் பாதுகாப்போம் திட்டம், சிறுநீரகம் காக்கும் சீர்மிகு திட்டம். தொழிலாளர்களை தேடி மருத்துவம், சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம். நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், பாதம் பாதுகாக்கும் திட்டம், சிறுநீரகம் விழித்திரை பாதிப்புகளை சீர் செய்யும் மருத்துவம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதியன்று நியூயார்க்கில் நடந்த 79-வது ஐ.நா.பொது சபையின் லெவன்த் பிரண்ட்ஸ் ஆப் தி டாஸ்க் போர்ஸ் கூட்டத்தில் 2024-க்கான டாஸ்க் போர்ஸ் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் சுகாதார அமைச்சகங்கள் அல்லது சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனம் என்ற பிரிவின் கீழ் தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் நடைபெற்ற விழாவில், 2023-24-ஆம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் இரண்டாவது மாநிலமாக, தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.இந்திய அளவில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் கடந்த மூன்று வருடங்களாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையானது, தொடர்ந்து முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.