கத்தி முனையில் கடத்தப்பட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர்!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கத்திமுனையில் காரில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடுமலை அன்சாரி வீதியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அமைச்சரின் உதவியாளரான கர்ணன் இருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து கத்திமுனையில் கர்ணனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தனர். பின்னர் அலுவலகம் முன் நிறுத்திவைத்திருந்த காரில் கடத்திச் சென்றனர்.
இது குறித்த தகவலறிந்த திருப்பூர் மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல், டிஎஸ்பி ரவிகுமார் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், அமைச்சரின் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
அதே வேளையில், திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, சில கி.மீ. தொலைவில் கர்ணனை அந்தக் கும்பல் காரிலிருந்து இறக்கிவிட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. திரும்பிவந்துள்ள கர்ணனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
newstm.in